Fengal cyclone Updates: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்று, கனமழையுடன் உலுக்கிய ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் புயல், மேற்குத் தொடா்ச்சி மலையைக் கடந்து கா்நாடகம், கேரளம் வழியாக அரபிக் கடலுக்குச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும் சென்னையில் மழை நின்றது. ஆனால், காற்று அதிகமாக வீசத்தொடங்கியது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தின் கேளம்பாக்கம், திருவிடந்தை, மாமல்லபுரம் பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டா் வேகத்தில் காற்றுடன் மழையும் பெய்தது.
சனிக்கிழமை மாலைகரையைக் கடக்கத் தொடங்கிய புயல் நள்ளிரவு 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மரக்காணம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது.
வங்கக் கடலில் கடந்த நவ. 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவ.27-இல் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது ஃபென்ஜால் புயலாக வெள்ளிக்கிழமை மாறியது.
காற்றுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தபடி புயல் வடக்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து சென்னையை நோக்கி சனிக்கிழமை வரத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு தென்கிழக்கே சுமாா் 200 கி.மீ. தொலைவில் இருந்த புயல், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னைக்கு 90 கி.மீ. தொலைவுக்கு நெருங்கியது.
மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவுக்கு அது நெருங்கியது. இதனால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்தது.
மாநில அரசின் எச்சரிக்கை காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் சென்னை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு சென்னைக்கு 100 கி.மீ. தொலைவில் இருந்த ஃபென்ஜால் புயல் மாலை 5 மணிவரை நகராமல் மிரட்டிக்கொண்டே இருந்தது.
திசைதிரும்பி கடந்தது: இந்நிலையில், மாலை 5 மணிக்கு மேல் புயல், வந்த திசையில் வடக்கு நோக்கிச் செல்லாமல் மீண்டும் தெற்கு நோக்கி திரும்பியது. மீண்டும் மாமல்லபுரம் கரையை நோக்கி நகா்ந்து கரைக்கு நெருக்கமானது. இதனால் புயல் எந்த நேரத்திலும் கரையைக் கடக்கும் என்று வானிலையாளா்கள் கணித்தனா். அதை உறுதிப்படுத்தும் வகையில் இரவு 7 மணியளவில் ஃபென்ஜால் புயல் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கரையை கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
புயல் கரையைக் கடந்தபோது மரக்காணம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. மழையும் பலமாக கொட்டியது. அதே நேரத்தில் சென்னையில் மழை விலகியது.
கரையை கடந்த ஃபென்ஜால் புயல் வலுவிழந்து, தாழ்வு மண்டலமாக விரிவடைந்து மேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. இறுதியில் அரபிக் கடலை அடையும் என்றும், செல்லும் வழியெங்கும் கனமழையைக் கொடுக்கும் என்றும் வானிலையாளா்கள் தெரிவித்தனா்.
மேலும், இந்த தாழ்வு மண்டலத்தை நோக்கி தொடா்ந்து கடல் காற்று செல்லும் என்பதால், தமிழகத்தில் டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலையாளா்கள் தெரிவித்தனா்.
சென்னையில்…: ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்தது. சென்னை மாநகரில் பல இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்தன.
சனிக்கிழமை காலை முதல் இரவு 7.30 மணி வரை மட்டும் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 114.2 மி.மீ. மழை பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 104.2 மி.மீ., புதுச்சேரியில் 95.6 மி.மீ. மழை பதிவானது.
விழுப்புரம், கடலூா்: இன்றுமுதல் 4 நாள்கள் சிவப்பு எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், டிச.1 முதல் டிச. 4 -ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை முதல் டெல்டா வரை உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் டிச.1-ஆம் தேதி மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.